பாகிஸ்தானின் அடுத்தப் பிரதமர் யார்? பரபரப்பாக நடந்து வரும் தேர்தல்
பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்க உள்ளது. கடந்த 70 ஆண்டு கால பாகிஸ்தான் வரலாற்றில் இப்போது தான் இரண்டாவது முறையாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கும், சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் பிஎம்எல்-என் கட்சிக்கும் இடையில் தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவத்தின் தலையீடு, தீவிரவாத அமைப்புகள் போட்டியிடுதல் என்ற பல்வேறு காரணிகள், இந்தத் தேர்தலின் நம்பகத்தன்மையை சோதிக்க உள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமர் பாஜ்வா, ‘வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் தேர்தல் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வர். வாக்குப் பதிவு சீராக நடக்கிறதா என்பதை கண்காணிப்பது மட்டுமே ராணுவத்தின் வேலையாக இருக்கும்’ என்று உறுதியளித்துள்ளார்.
தீவிரவாத அமைப்புகளையும் தேர்தலில் போட்டியிட அனுமதித்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மும்பை தாக்குதலுக்குக் காரணமாக இருந்த ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா கட்சியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது என்பது கவனத்துக்குரியது. தேர்தல் பிரசாரங்களின் போது பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. பலோசிஸ்தான் மாகாணத்தில் மட்டும் இது தொடர்பான தாக்குதலில் 151 பேர் கொல்லப்பட்டனர்.