6 மாத பச்சிளம் குழந்தையை சாலையில் வீசிய இளம்பெண்!
பிறந்து 6 மாதமே ஆன பெண் குழந்தையை சாலை ஓரத்தில் வீசி விட்டு இளம்பெண் தப்பி ஓடினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பொதுப்பணித் துறை நீர் வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வளாகம் உள்ளது. இதே வளாகத்தில் போக்குவரத்துத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமும் உள்ளது. ஞாயிறன்று அரசு விடுமுறை என்பதால் அலுவலகங்கள் இயங்கவில்லை.
பொதுப்பணித்துறை அலுவலகத்தின் கிழக்குப் பகுதியில் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கும் வாசல் கதவு முன்பு வடமதுரை செல்லும் சாலையில் ஓரத்தில் செடி கொடிகளில் பிறந்து 6 மாதங்களே ஆன பெண் குழந்தையை ஒரு இளம்பெண் பிற்பகல் 1.30 மணியளவில் வாசல் கதவு முன்பு வீசி விட்டு தப்பி ஓடி விட்டார்.
அப்பெண், ஆட்கள் நடமாட்டத்தை பார்த்தவுடன் வட மதுரை சாலையில் சென்று தோட்டப் பகுதிக்குள் மறைந்து கொண்டார். அப்போது அவ்வழியே வந்தவர்கள் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு பார்த்தபோது துண்டால் சுற்றப்பட்டு குழந்தை கிடந்தது.
பின்னர் 108 ஆம்புலன்சுக்கு கொடுத்த தகவலின் பேரில், அவர்கள் விரைந்து வந்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.