ஹர்திக் படேலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!
படேல் சமூக மக்களுக்காக குஜராத்தில் போராட்டத்தை முன்னெடுத்த ஹர்திக் படேல், 2015-ம் நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு, ஹர்திக் படேல், குஜராத்தில் இருக்கும் படேல் சமூக மக்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் தனியே இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கோரி மாநிலம் தழுவிய அளவில் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்.
2015 ஆம் ஆண்டு, ஜூலை 15 ஆம் தேதி, விஸ்நகரில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ ருஷிகேஷ் படேலின் அலுவலகத்தை சூரையாடியதாக ஹர்திக் மற்றும் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பட்டிதர் அனாமத் அந்தோலன் சமிதி கட்சியின் தலைவராக இருக்கும் ஹர்திக் மீது விஸ்நகர் போலீஸ் வன்முறையில் ஈடுபட்டதற்காக வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் அந்த வழக்கு விசாரணை முடிந்து, ஹர்திக் படேல் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் தான் ஹர்திக் படேல் மீண்டும் மக்களுக்கான இடஒதுக்கீடு கோரி காலவரையற்ற போராட்டத்தைத் துவக்க உள்ளதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.