ப.சிதம்பரத்தை கைது செய்யத் தடை!- டெல்லி உயர் நீதிமன்றம்
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் ஆகஸ்ட 1 ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியாவின் இயக்குநர்களாக இருந்தவர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி.
300 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர அப்போது, மத்திய அரசில் அமைச்சராக இருந்த தனது தந்தையான ப.சிதம்ரத்தின் செல்வாக்கை கார்த்தி, பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். ஆனால், சில நாட்களுக்குப் பின்னர் அவருக்கும் பிணை வழங்கப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க, இந்த வழக்கிலிருந்து தனக்கு முன் ஜாமின் கொடுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் ப.சிதம்பரம். மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 1 அன்றே, மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.