60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே கல்வி கடன்: எஸ்பிஐ
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
12ம் வகுப்பு படித்த மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான கனவு இருந்தும் பொருளாதாரத்தில் பின்தங்கிய காரணத்தால் கனவு நிஜமாகாமல் போகிறது. இதை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, மாணவர்கள் வங்கி கடன் பெற்று மேற்படிப்புகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்வி கடன் வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்றும், நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கை மற்றும் தந்தை பெயரில் எந்த கடனும் நிலுவையில் இருந்தால் கடன் வழங்கப்படாது என்றும் எஸ்பிஐ வங்கி தலைஞாயிறு கிளை மேலாளர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்க முடியும் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கல்வி கடன் குறித்த நிபந்தனையை எஸ்பிஐ உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.