உலக வங்கியின் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி கடலில் மூழ்கி பலி
By SAM ASIR
இந்தோனேஷியா, பாலியில் கடலில் நீந்தியபோது உலக வங்கி அதிகாரி ஆகான்ஷா பாண்டே (வயது 37) அலையால் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார். இந்திய வம்சாவளியினரான இவர், அமெரிக்க பிரஜை ஆவார்.
ஆகான்ஷா பாண்டே, உலக வங்கியில் மூத்த சுகாதார பொருளாதார வல்லுநராக பணியாற்றி வந்தார். மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான பிரிவுக்கு பொறுப்பு வகித்து வந்த அவர், சிங்கப்பூரில் வசித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை சேமியாங்கில் டபுள் சிக்ஸ் ஹோட்டல் அருகே கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது அலையில் சிக்கி அவர் மூழ்கினார். ஆகான்ஷா பாண்டேவை மாலை 5:15 மணிக்கு ஷீலோவாம் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பாண்டே ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட பகுதியில் நீந்துவதாக அவரை இருமுறை எச்சரித்ததாக கடற்கரையின் காவலர்கள் எச்சரித்ததாகவும், நீந்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு அங்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வானிலை மையமும் அலைகள் உயரமாக எழும்பக்கூடும் என்று எச்சரிப்பு விடுத்திருந்ததாக தெரிகிறது.