அமெரிக்கா டூ இந்தியா - மூட்டைப்பூச்சியுடன் விமானப் பயணம்
By SAM ASIR
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தன்னையும் தன் மூன்று குழந்தைகளையும் மூட்டைப்பூச்சிகள் கடித்ததாக பெண் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், நேவார்க்கிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் வகுப்பில் ஷாம்யா ஷெட்டி என்ற பெண், தனது மூன்று குழந்தைகளுடன் பயணம் செய்துள்ளார். குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு பிசினஸ் வகுப்பு வசதியாக இருக்கும் என்று எண்ணி வந்த அவருக்கு ஏர் இந்தியா எதிர்பாராத அதிர்ச்சியை அளித்துள்ளது.
விமானத்தில் அவரையும் பிள்ளைகளையும் மூட்டைப் பூச்சிகள் பாடாய்ப்படுத்தியுள்ளன. "பலமுறை புகார் கூறியும், விமானம் இறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் விமான பணியாளர்கள் மாற்று இருக்கை வழங்கினர். அதுவரை மூட்டைப்பூச்சிகள் இருந்த இருக்கைகளிலேயே உறங்கும்படி கூறினர்," என்று ஷாம்யா தெரிவித்துள்ளார். மூட்டைப்பூச்சிகள் கடித்ததில் உடல் முழுவதும் தடித்துப்போய் இருந்ததை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
நியூயார்க்கிலிருந்து பயணித்த பிரவின் டன்சேகர் என்ற பயணியும் இதே அனுபவத்தை பெற்றுள்ளார். "ரயில்களில் மூட்டைப்பூச்சிகள் இருப்பதைக் குறித்து கேள்விப்பட்டுள்ளேன். மஹாராஜா சேவையான ஏர் இந்தியாவில் பிசினஸ் வகுப்பில் எல்லா இருக்கைகளிலும் மூட்டைப்பூச்சிகள் உள்ளன," என்று தமது டுவிட்டர் பதிவில் அவர் குறைபட்டுக்கொண்டுள்ளார்.
மூட்டைப்பூச்சிகள் பற்றி புகார் கூறிய பிறகு, பாதி நேரம் உடைந்த மேசைகள், பழுதுபட்ட டி.வி இருந்த சாதாரண வகுப்பு இருக்கைகளில் என் மனைவியும் மகள்களும் பயணிக்க நேர்ந்தது என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, நடந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், தரமான சேவை தருவதற்கு தொடர்ந்து முயற்சிப்பதாகவும், விமானத்தை சுத்திகரிப்பதற்காக பராமரிப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிப்பதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.