ட்ரம்ப்பின் வர்த்தகப் போர்- கூடுகிறது பிரிக்ஸ் மாநாடு
சர்வதேச அளவில் உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்தி வரும் வர்த்தகப் போருக்கு எதிராக முதந்முறையாக பிரிக்ஸ் மாநாடு கூடுகிறது.
சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலின் அதிபர் மிச்சல் டீமர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோஸா ஆகியோர் இந்த வருடாந்திர சந்திப்பில் கலந்து கொண்டு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். அதிபர் ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரிலுடன் நேற்று சந்தித்து உரையாடினார். சந்திப்புக்குப் பிறகு ஜின்பிங், ‘தற்போது சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் மாற்றங்களுக்கு பிரிக்ஸ் மாநாட்டின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகப் போர் உச்சத்தில் இருக்கும் நிலையில், ட்ரம்ப், ‘சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு 500 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றன. இரு நாடுகளுக்கும் வர்த்தகத்தில் சரியான முறை பின்பற்றப்படவில்லை என்றால், இந்த 500 பில்லியன் டாலர் பொருட்களுக்கும் வரி அதிகரிப்பு செய்வேன்’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதனால், சர்வதேச சந்தைகளில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று யூகிக்கப்படுகிறது. பிரிக்ஸ் நாடுகளில் தான், உலகில் இருக்கும் 40 சதவிகித மக்கள் தொகை அடங்கியுள்ளது. இதில் இருக்கும் நாடுகள் வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வருபவை ஆகும். அமெரிக்க வர்த்தகப் போர் உச்சத்தில் இருப்பதால், இந்த மாநாடும் இதில் எடுக்கப்படும் முடிவுகளும் மிக முக்கியமானதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.