விசாரணை ஆணையங்கள் கேலிகூத்து- நீதிபதி பரபரப்பு கருத்துnbsp
By Radha
விசாரணை ஆணையங்கள் கேலிகூத்தாகி இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அதையடுத்து 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலகம் கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
அது குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பல்வேறு கட்டங்களாக நீதிபதி ரகுபதி ஆய்வு நடத்தினார்.
கமிஷன் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.சம்மனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி மனு தாக்கல் செய்தார்.
விசாரணை பாரபட்ச மாகவும், உள்நோக்கத்துடனும் நடப்பதால் இந்த கமிஷனின் விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ எனவும் அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ரகுபதி கமிஷனுக்கு தடை விதித்து கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கண்துடைப்புக்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் கேலிகூத்தாகி இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
"ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையங்களை மக்கள் நம்புவதில்லை. நீதிபதி ரகுபதி கமிஷனுக்கு தடை விதித்தும் கடந்த 3 ஆண்டுகளாக சம்பளம் வழங்கியது ஏன்? அந்த ஆணையத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எத்தனை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன" என நீதிபதி சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"தடை விதித்த கமிஷனுக்கு சம்பளம் வழங்கியதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது" என நீதிபதி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.