சென்னையில் தனியார் பல்பொருள் அங்காடியில் சாக்லேட் திருடிய பெண் காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை எழும்பூரில் தனியார் பல்பொருள் அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சீருடையில் வந்த பெண் காவலர் நந்தினி, நீண்ட நேரம் பொருட்களை பார்வையிட்டுள்ளார். பின்னர், ஒரே ஒரு பொருளுக்கு பில் போட சென்றுள்ளார். சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள், காவலர் நந்தினியிடம் விசாரித்துள்ளனர்.
ஆனால் திருடியதை பெண் காவலர் ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், காவலர் நந்தினியை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, அவர் பேண்ட் பாக்கெட்டில் சாக்லேட், ஓடோமாஸ் உள்ளிட்ட பொருட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பொருட்களை பறித்த கடை ஊழியர்கள், காவலர் நந்தினியை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனை அறிந்த பெண் காவலரின் கணவர், பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதோடு, தட்டிக்கேட்க வந்த ஊழியர்களை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்படிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.
சம்பவம் குறித்து அறிந்த கடையின் உரிமையாளர் சிசிடிவியில் பதிவான காட்சிகளை எடுத்து சென்று பெண் காவலர் நந்தினி மற்றும் அவரது கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, காவலர் நந்தினை சஸ்பெண்ட் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
காவலர் நந்தியின் கணவர் மீது கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீருடையில் பெண் காவலர் சாக்லேட் திருடிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.