எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் அவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15ம் தேதி தொடங்கியது. வரும் ஜனவரி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய மற்றும் நிலுவையில் உள்ள சில மசோதாக்களையும் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இரண்டு விடுமுறை நாட்கள் முடிந்த நிலையில், இன்று காலை மீண்டும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது.

அப்போது, ஒக்கி புயலால் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த மக்களுக்கு முதலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானவர்களுக்கும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து, அவையின் வழக்கமான அலுவல் தொடங்கியது. அப்போது, திடீரென்று எழுந்து நின்ற பாஜக எம்.பிக்கள் மோடி வாழ்க, பாஜக வாழ்க என்று கோஷமிட்டனர். குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து, அக்கட்சியை சாடும் வகையில் பாஜக உறுப்பினர் கிரித் சோமைய்யா பேசினார்.

காங்கிரஸ் உறுப்பினர்களும் எழுந்து நின்று சமீபத்தில் குஜராத் தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சில எதிர்கட்சியினர் ஒடிசா வெள்ள நிலவரம் தொடர்பாக முழக்கமிட்டனர்.

இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து, பகல் வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். பிற்பகலில் அவை கூடியபோதும், இதே நிலை ஏற்பட்டது. இதனால், நாளை வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

More News >>