அயனாவரம் சிறுமி வழக்கு : 17 பேருக்கு போலீஸ் காவல்

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரை 5 போலீஸ் காவல் வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 30 ஆண்டுகளாக டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். மாற்றுத்திறனாளியான அவரது 2-வது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.    கடந்த 7 மாத காலமாக அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள எட்டு லிப்ட் ஆப்ரேட்டர்கள், ஆறு காவலாளிகள், அந்த அப்பார்ட்மெண்டுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வருகிறவர்கள், எலெக்ட்ரீஷியன்கள் என 17 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.     உடனடியாக அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த போலீசார், 17 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அதில் பல உண்மைகள் வெளிவந்ததை தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் 17 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.    கடந்த 17ஆம் தேதி 17 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 31ஆம் தேதி வரை 17 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.   இதனிடையே, 17 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், 17 பேரையும் 5 நாள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 17 பேரையும் ரகசிய இடத்தில் தனித்தனியாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 
More News >>