உடல் நலம் நலிவு: கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ஓபிஎஸ்
உடல் நலம் நலிவு ஏற்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அரசியல் மூத்த தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகி ஓய்வுபெற்று வருகிறார் இந்நிலையில், சுவாசப்பிரச்சனை காரணமாக கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டது. அதன் காரணமாக மருத்துவர்கள் ஆலோசனை படி ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அந்த உணவுக்குழாய் மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பாக பல்வேறு வதந்திகள் வந்தன. காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் வயது மூப்பின் காரணமாக கருணாநிதியின் உடல் நிலையில் சற்று நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவரின் சிறுநீரக தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இதன் காரணமாக அவருக்கு 24 மணி நேரமும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட குழு அவரின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாக ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
அரசியல் நாகரிகம் கருதி கருணாநிதியின் உடல் நிலையை விசாரிக்க வந்தோம். அதுவே அரசியல் மாண்பு. புரட்சி தலைவி ஜெயலலிதா உடல் நலம் சரி இல்லாமல் இருந்த போது விசாரித்து இருந்தார். கருணாநிதி விரைவில் உடல் நலம் பெற்று குணம் அடைவார் என ஜெயக்குமார் தெரிவித்தார்.