நில மோசடி... முடிவுக்கு வந்த நடிகர் வடிவேலு பிரச்சினை
நில விற்பனை தொடர்பான வழக்கில் நடிகர் வடிவேலு மற்றும் நில உரிமையாளர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவர் தொழில் செய்ய இரும்புலியூரில் உள்ள தனது 34 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தார்.
இந்த கடன் தொகையை சரிவர செலுத்த இயலாததால் பிணையாக வைக்கப்பட்ட சொத்தை தொழில் முதலீட்டு நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு பொது ஏலம் மூலம், சென்னை அசோக் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சொக்கலிங்கம் பழனியப்பன் என்பவருக்கு விற்றது.
இந்நிலையில், ராமச்சந்திரன் இறந்த பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் அந்த நிலத்தை விற்க, நடிகர் சிங்கமுத்துவுக்கு பவர் ஆப் அட்டர்னி எழுதி கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து நடிகர் வடிவேலுக்கு இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டது.
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தனது நிலத்தை மீட்டுத் தர கேட்டு, ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் ராமச்சந்திரனின் மனைவி, மகன், நடிகர்கள் சிங்கமுத்து, வடிவேல், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, நிலத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட பழனியப்பன் உள்பட இருவருக்கு எதிராக 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த அனைத்து வழக்குகளும் நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நில பிரச்சினை தொடர்பாக நடிகர் வடிவேலு மற்றும் பழனியப்பன் இடையே சமரசம் ஏற்பட்டு, பழனியப்பன் தரப்பில் வடிவேல் தரப்பினருக்கு 85 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து பழனியப்பனிடம் நஷ்ட ஈடு கோரிய மனுவை நடிகர் வடிவேலு திரும்ப பெற்றுக் கொண்டார். இதையடுத்து அனைத்து வழக்குகளையும் நீதிபதி முடித்து வைத்தார்.