உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 10ம் தேதி நடைபெறும்: இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 10ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இலங்கையில் கடந்த 2015ம் ஆண்டில் இருந்து உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாமல் இருந்தது. இதனால், மக்களிடையே ஆளுங்கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டது. தேர்தல் தள்ளிப்போடப்படுவதற்கு, புதிய தொகுதிகளை உருவாக்கும் சீர்திருத்தங்கள் நடந்து வருவதே காரணம என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக தீவிரமாக பரிசீலித்த இலங்கை தேர்தல் ஆணையம் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி தேர்தலை நடத்த தீர்மானத்தது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுடன் ஏற்பட்ட மோதலால், முன்னாள் அதிபர் ராஜபக்சே தனிக்கட்சி தொடங்கினார். ராஜபக்சே கட்சியுடன் கூட்டணி வைத்து இந்த உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திட்டமிட்ட மைத்ரிபாலா சிறிசேனா ராஜபக்சே கட்சியினருடன் பலசுற்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடனான உறவை முறித்து கொண்டால் கூட்டணிக்கு தயார் என ராஜபக்சே கட்சி நிபந்தனை விதித்தது.

இதனால், வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்தலில் ராஜபக்சே கட்சி ஆளும்கட்சியை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>