கொள்ளிட ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரிகள்...?
கொள்ளிடம் ஆற்றங்கரையில் எத்தனை மணல் குவாரிகள் செயல்படுகிறது என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து அணைக்கரை வரை கொள்ளிடம் ஆற்றங்கரையில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. அனுமதித்த அளவைவிட அதிக அளவில் மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் அடிக்கடி போராட்டம் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக சட்டவிரோத மணல் குவாரிகளை மூட வலியுறுத்தி, போராட்டம் நடத்த, திருமானூர் காவல் நிலைய ஆய்வாளர் அனுமதி மறுத்துள்ளார். இதை எதிர்த்து, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் மனிதர் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி. ராஜா, “சட்டவிரோத மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுப்பதற்காகத் தானே போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறார்" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “எத்தனை மணல் குவாரிகள் செயல்படுகின்றன. அவைகள் யாருக்கு சொந்தமானது..? முறையான அனுமதி பெற்று நடத்தப்படுகிறதா" எனக் கேட்ட நீதிபதி, இது குறித்து வரும் 30ஆம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.