பரங்கிமலை ரயில் விபத்து... துறை ரீதியான விசாரணை

பரங்கிமலை ரயில் விபத்தில் 5 பேர் இறந்த சம்பவத்தில் மனித தவறா என்ற கோணத்தில் துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 5 பயணிகள் உயிரிழந்தனர். படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்தது.

ரயில்வேபாதுகாப்பு படை போலீசார், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாரை தப்பட்டை அடித்து துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.

ஓடும் ரயிலிலோ, படியில் நின்றோ பயணம் செய்யக்கூடாது என பயணிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே கோட்ட துணை மேலாளர் சத்துரு, பரங்கி மலையில் 5 பேரை பலி கொண்ட விபத்து மனித தவறா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார். மேலும், இந்தத் துறை ரீதியான விசாரணை யில் பொது மக்களிடம் கருத்து கேட்டு அதுவும் பதிவு செய்யப்படுவதாக அவர் கூறினார்.

“இந்த விபத்துக்கு காரணமான பரங்கிமலை ரயில் நிலைத்துள்ள தடுப்புச்சுவரை நீக்குவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி நான்கு மாதத்தில் முடிவடைந்து விடும். அதன் பிறகு கூட்டநெரிசல் புறநகர் ரயிலில் இருக்க வாய்ப்பு குறைவு" என அவர் தெரிவித்தார்.

"கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தற்போது 13 பெட்டிகளுடன் இயங்கிவரும் புறநகர் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும்" என்று ரயில்வே கோட்ட துணை மேலாளர் கூறினார்.

More News >>