உள்ளாட்சி தேர்தலை நடத்த அஞ்சுகிறது அதிமுக அரசு - முத்தரசன்
தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அஞ்சி நடுங்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க 12-வது மாநில மாநாட்டையொட்டி ஆலோசனை கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் என்று போற்றக்கூடிய கருணாநிதி, ஓராண்டு காலமாக உடல்நலம் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்றார்.
கடந்த சில நாட்களாக அவருக்கு சற்று காய்ச்சல் அதிகமாகியிருக்கிறது. அவர் பூரண உடல்நலம் பெற்று தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்றைக்கு மோடி தலைமையிலான மத்திய அரசினால் நாட்டில் பல பிரச்சினைகள் உருவாகியிருக்கிறது. தேச ஒற்றுமை பாதிக்கப்பட்டுள்ளது, அரசியல் சாசன அமைப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாநில உரிமை, நலன் பறிக்கப்பட்டு வருகிறது. தாய்மொழிக்கு பாதுகாப்பற்ற சூழல், பிறமொழி திணிக்கப்படுகிறது. மக்களை பிளவுப்படுத்துவதற்காக மிக மோசமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய அரசுக்கு ஒரு இசைவான அரசாகவும், மத்திய அரசு எத்தகைய உரிமையை பறித்தாலும் அதைப்பற்றி கவலைப்படாத அரசாகவும் தமிழக அரசு இருந்து வருகிறது. கிராம நிர்வாகம் முதல் தலைமை செயலகம் வரை அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
மத்திய அரசு, வருமான வரித்துறை போன்ற துறைகளை அரசியல் பழிவாங்குவதற்காக பயன்படுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தேசத்தை காப்போம், அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி ஆகஸ்டு 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடத்தி 15-ஆம் தேதி மாலை திருப்பூரில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.
மாநில அரசு, சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்திருப்பது சர்வாதிகார போக்காகும். இந்த வரி உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அதிகாரிகளை கொண்டு ஆட்சி நடத்தி வருகிற நிலையில் மிக கடுமையாக வரியை உயர்த்துவது ஏற்புடையது அல்ல.
உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தால் தேர்தலை நடத்த அதிமுக அஞ்சி நடுங்குகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததை மத்திய அரசும் காரணம் காட்டி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க பெற வேண்டிய நிதியை வழங்காமல் அபகரித்து வருகிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நீதிமன்றம் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் துணை முதலமைச்சராக நீடிப்பது ஏற்புடையது அல்ல. அவர் தனது பதவியை விலகி இந்த விசாரணையை எதிர்கொண்டு தான் குற்றமற்றவர் என்று நிரூபித்த பின்னர் துணை முதலமைச்சர் பதவியில் இருக்க வேண்டும்.
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் அடித்து சாலை போடுவது தேவையற்ற ஒன்று. இந்த திட்டத்திற்கு 90 சதவீத விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து நிலத்தை ஒப்படைத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது அப்பட்டமான பொய். காஷ்மீர் பிரச்சினையில் அந்த நாடும் பாகிஸ்தானும் அமைதி வழியில் சுமூகமாக பேசி தீர்வு காணவேண்டும்.” என்று கூறினார்.