தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 2.75 லட்சம் மருத்துவர்களும், தமிழகத்தில் மட்டும் 32 ஆயிரம் மருத்துவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். காலை ஆறு மணிக்கு தொடங்கிய போராட்டம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவுபெறுகிறது.

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆணையம் மூலம் குடும்பநலம் மற்றும் மருத்துவ சேவையை, மாநில அரசிடம் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

“தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டால் 6 மாத பயிற்சி மேற்கொள்வதன் மூலம், மருத்துவம் படிக்காதவர்கள் அலோபதி சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வழிவகை ஏற்படும். இது மக்களின் மருத்துவ சிகிச்சை முறைகளில் பேராபத்தை விளைவிக்கும். இதன் மூலம் போலி மருத்துவர்களை உருவாக்க அரசே அங்கீகாரம் அளிப்பது போன்று அமைந்து விடும்." என மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

"எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்ற மற்றும் பயிற்சி மருத்துவர்கள் மீண்டும் ஒரு முறை தேர்வு எழுதி வெற்றிப் பெற்ற பின்னரே தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடும் மருத்துவர்களை பாதிக்கும். இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக நாடாளுமன்ற நிலை குழுவிடம் அறிக்கை அளித்து பல மாதங்களாகியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறும் மருத்துவர்கள், உடனடியாக இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More News >>