எனக்கு கல்யாணமா...? - கொதிக்கும் தமன்னா
அமெரிக்க மருத்துவருடன் தமக்கு திருமணம் இல்லை என நடிகை தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா. ஆந்திராவில் பிரபலமான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘சயீரா நரசிம்மரெட்டி' படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர தமிழில் பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் த்ரில்லர் படம் ஒன்றிலும், இயக்குநர் விஜய் இயக்கும் தேவி படத்தின் இரண்டாம் பாகத்திலும் தமன்னா நடிக்க உள்ளார்.
இதனிடையே, நடிகை தமன்னா குயின் பட தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரை தமன்னா திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் பரவியது. இந்த வதந்தியால் நடிகை தமன்னா கோபம் அடைந்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்த தமன்னா, “முதலில் நடிகர், பின் கிரிக்கெட் வீரர் , தற்போது டாக்டரா? இந்த வதந்திகளை கேட்டால் நான் தினமும் கணவர்களை மாற்றுவது போல உள்ளது."
"நான் சிங்கிள் தான். தற்போது நடிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறேன். என் பெற்றோரும் தற்போது மாப்பிள்ளை தேடவில்லை" என தமன்னா கூறியுள்ளார்.