டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் கட்டண சலுகை... இந்தியன் ரயில்வே அதிரடி

முன்பதிவு அல்லாத ரயில் டிக்கெட்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் கட்டணசலுகை வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே IRCTC இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல், இணையதளம் மூலம் கேட்டரிங் மற்றும் தங்கும் அறைகள் முன்பதிவு செய்யவும் 5 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்குவோருக்கு டிஜிட்டல் முறையில் செலுத்தினால் 0.5 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க இத்தகைய சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

முன்பதிவு டிக்கெட் மூலம் ரயில்வேக்கு நாளொன்றுக்கு ரூ.120 கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் ரூ.25 - ரூ.30 கோடி வரை, டிக்கெட் கவுன்டர்களில் வாங்கப்படுகின்றன. கவுன்டர்களில் டிக்கெட் வாங்கிய சுமார் 3 முதல் 5 கோடி பயணிகள் தற்போது டிஜிட்டலுக்கு மாறியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துளது. இதன் ஒரு பகுதியாக பீம் ஆப்ஸ் மூலம் ரயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையில் டிக்கெட் முன்பதிவு 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:

பண பரிவர்த்தனையை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். எனவே, பயணிகளுக்காக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் நிதிச்சுமையை ரயில்வே ஏற்றுக்கொள்கிறது. விரைவில் புதிய தள்ளுபடி சலுகைகள் வெளிவரும் என்றார்.

பயணிகள் செலுத்தும் தொகையில் சுமார் 60 சதவீத பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு பணமற்ற பரிவர்த்தனை சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த முன்பதிவுகளில் 85 முதல் 90 சதவீதம் பண மற்ற பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் ரயில்வேயில் சேவை கட்டணம் ரத்து மூலம் ஆண்டுக்கு சுமார் 400 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>