கட்டியை கரு எனக்கூறி சிகிச்சை... இழப்பீடு கோரி வழக்கு
By Radha
வயிற்றில் வளர்ந்த கட்டியை கரு என்று கூறி 8 மாதங்கள் சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனையிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் ஹசீனா பேகம். திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பின், மாதவிடாய் நின்ற காரணத்தால் சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றார்.
பரிசோதித்த மருத்துவர்கள் அவரிடம் கருவுற்றிருப்பதாக கூறினர். ஆறு ஆண்டுகளுக்கு பின் மகப்பேறு பாக்கியம் பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தார் அசினா பேகம்.
2016 நவம்பர் 18-ஆம் தேதி பிரசவ தேதி என மருத்துவர்கள் குறித்துக் கொடுக்க, குடும்பத்தினர் 2016 அக்டோபர் 16ல் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தினர்.
ஆனால், மருத்துவர்கள் குறித்துக் கொடுத்த தேதியில் பிரசவ வலிக்கு பதில், அடி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் கட்டி இருப்பதாக கூறியுள்ளனர்.
குடும்பத்துக்கு வாரிசு கிடைக்கப் போகிறது என மகிழ்ந்த குடும்பத்தினருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கருவுற்றிருப்பதாக கூறி எட்டு மாதங்களாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீதும், மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஹசீனா பேகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ அறிக்கை குறித்து 2 வாரங்களில் விளக்கம் அளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.