பள்ளத்தில் இருக்கும் நாட்டை மீட்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: கங்கனா ரனாவத்
நாட்டில் திட்டங்களை செயல்படுத்த 5 ஆண்டுகள் போதாததால், பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நடிகை கங்கனா ரெனாவத் கூறியுள்ளார்.
பத்து ஆண்டுகாள காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜக கடந்த 2014ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அடுத்த ஆண்டு ஐந்து ஆண்டு கால ஆட்சி முடிவடையும் நிலையில் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் ஆட்சியை பிடிக்க இப்போது இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் திட்டங்களை செயல்படுத்தி முடிக்க 5 ஆண்டு போதாது என்றும் அதனால் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும் கங்கனா ரெனாவத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து குறும்படம் திரையீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், நடிகை கங்கனா ரெனாவத் உள்பட பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
அப்போது இதுகுறித்து கங்கனா ரெனாவத் கூறுகையில், “பிரதமர் மோடி சிறு வயதில் மிகவும் கடினமாக உழைத்தவர். கடினமான சூழலிலும் வாழ்ந்தவர் என்பது இக்குறும்படம் காட்டுகிறது.
நாம் தான் அவரை பிரதமராக தேர்ந்தெடுத்தோம். இந்த பதவியை யாராலும் பறிக்க முடியாது. இது அவருடைய கடும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. நம் நாடானது தற்போது பள்ளத்தில் இருக்கிறது. நாட்டை மீட்க 5 ஆண்டுகள் தோதாது. அதனால், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் ” என்றார்.