சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் பார்த்த வெங்கய்யா நாயுடு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து, அவரது உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு விசாரித்து தெரிந்துக் கொண்டார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சுவாசப் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து அவருக்கு செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டது. இதனால், அவ்வப்போது காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாநிதியின் உடல் நலிவுற்றது. இதனால், அவருக்கு வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலை மோசமானதால் அவரை உடனே, காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், இன்று காலை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு, கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்று அவரை நேரடியாக சந்தித்தார்.

அதன்பிறகு வெளியில் வந்த வெங்கய்யா நாயுடு, கருணாநிதிக்கு அளித்து வரும் சிகிச்சைகள் மற்றும் உடல் நிலை குறித்து கேட்டு அறிந்தார்.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களையும் நேரில் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>