மஹாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ரத்னகிரி மாவட்டம் டபோலியில் அமைந்துள்ள கொன்கன் கிரிஷி வித்யாபீடம் என்ற கல்லூரியை சேர்ந்த ஊழியர்கள் சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பிரேத சுற்றுலாத்தலமான மகாபலேஷ்வருக்கு பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். மும்பையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் ராய்காட் மாவட்டம் அம்பெனலி காட் என்ற மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக 500 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 33 பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேருந்தின் ஜன்னல் வழியாக தூக்கி வீசப்பட்ட பிரகாஷ் சவந்த் தேசாய் என்பவர் மரக்கிளையைப் பிடித்து உயிர் பிழைத்தார்.
பேருந்தில் சென்றவர்களில் அவர் மட்டுமே காயத்துடன் உயிர் தப்பி இருக்கிறார். அரை மணி நேரத்திற்குப் பின் மேலே வந்து விபத்து குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவந்திர ஃபட்நவிஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.