பேருந்து விபத்தில் 33 பேர் இறப்பு: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அறிவிப்பு

பேருந்து விபத்தில் உயிரிழந்த 33 பேரினது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் துபோலியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக ஊழியர்கள் 33 பேர் சடாரா மாவட்டத்தில் உள்ள மகாபலேஸ்வர் பகுதிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர்.

அப்போது, அம்பெனலி காட் மலைப் பகுதிக்கு பேருந்து சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 500 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மற்ற அனைவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஆளும் கூட்டணியில் உள்ள சிவ சேனா கட்சி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>