இந்த அரசையே முடக்கி விடுவேன்- ஆவேசம் காட்டும் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது தொடர்பாக தனது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அரசின் செயல்பாடுகளை முடக்கிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
ட்ரம்ப், தொடர்ந்து அகதிகள் மற்றும் குடியுரிமை விவகாரத்தில் பல அதிர்ச்சிகர முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பல முஸ்லீம் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு, சட்டத்துக்கு புறம்பாக நாட்டில் குடியேறுபவர்களை சிறையில் அடைப்பது, மெக்சிக்கோ நாட்டு எல்லையில் சுவர் எழுப்பவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப், ‘ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லைப் பாதுகாப்பு, சுவர் எழுப்புதல் போன்ற கோரிக்கைகளுக்கு வாக்களிக்கவில்லை என்றால் அரசின் செயல்பாடுகளை முடக்கிவிடுவேன்’ என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்க செனட் சபை மற்றும் காங்கிரஸ் சபையில், ட்ரம்ப் எடுத்துள்ள முடிவுகளுக்கு ஆதரவு வந்தால் தான் அந்தத் திட்டங்களை செயல்படுத்த முடியும்.
அமெரிக்க காங்கிரஸ் சபையில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், கட்சிக்குள்ளேயே ட்ரம்பின் முடிவுக்கு மாற்றுக் கருத்துகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. செனட் சபையைப் பொறுத்த வரையில், குடியரசுக் கட்சிக்கு சிறிய அளவிலான பெரும்பான்மையே இருக்கிறது. இதனால், தான் ட்ரம்ப் ட்வீட்டில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்களை ஆதரவு தெரிவிக்கக் கோரி மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.