இந்தியாவின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை அரசு களையும்- வெங்கையா நாயுடு
நாட்டின் விவசாயத்தோடு ஊட்டச்சத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.
சென்னை சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஊட்டச்சத்துக்கான விவசாய முறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக அரசின் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் சுவாமிநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு தன் உரையில் குறிப்பிட்டதாவது, ‘ஐ.நா-வின் 2018-ம் ஆண்டின் நிலையான வளர்ச்சி இலக்கு ஜூன் 20, 2018-ல் வெளியிட்ட அறிக்கையின்படி உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் முதன்முறையாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கவலை அளிக்கிறது.
உலகில் பசி எண்ணிக்கை அதிகரிப்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும். இந்தியாவில் ஊட்டச்சத்தின்மை நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. எனினும் அது கொள்கை விவாதங்களின் போது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. எனவே இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை டாக்டர் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன், விவசாயத்தை ஊட்டச்சத்துடன் இணைப்பதற்கான கருத்தைக் கொண்டுவர இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டைக் களைவதில் இந்திய அரசு அக்கறையுடன் உள்ளது' என்றார்.