ஒரு ஆதார் எண்!- ட்ராய் தலைவரைத் திணறடித்த நெட்டிசன்கள்

ட்ராய் அமைப்பபின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். கூடவே, ’இப்போது எனது ஆதார் எண்ணை வெளியிட்டுள்ளேன். இதை வைத்து என்ன செய்துவிட முடியும்’ என்ற சவால்விட்டார்.

அவ்வளவுதான். நமது நெட்டிசன்கள் அவரது வங்கி கணக்கில் 1 ரூபாய் டெபாசிட் செய்ததில் இருந்து அவரது பெயரில் பல போலி கணக்குகள் தொடங்கியது வரை எனப் பல்வேறு செயல்களைச் செய்துவிட்டனர். ஆதார் குறித்துப் பொதுத் தளத்தில் கிடைக்கும் விவரங்களை வைத்து மேற்குறிப்பிட்ட வேலைகளை செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

ஷர்மா விட்ட சவாலை ஏற்றுக் கொண்டு, ஆதார் கார்டில் இருக்கும் 14 தரவுகளை கண்டுபிடித்து எடுத்துள்ளனர். அதில் ஷர்மாவின், போன் நம்பர், அவரது வாட்ஸ்அப் போட்டோ, பான் கார்டு தகவல்கள், போன் மாடல், வாக்காளர் அட்டை எண் போன்றவை அடங்கும்.

அதே நேரத்தில், வங்கி பரிவர்த்தனைகள், பயோ-மெட்ரிக் விவரங்கள் போன்றவை ஹாக் செய்யப்படவில்லை. ஆதார் கார்டை உருவாக்கிய குழுவின் தலைவராக ஷர்மா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஹேக்கர்ஸ் ஒருபடி மேலே சென்று ஷர்மாவின் வங்கி கணக்கில் 1 ரூபாய் பணத்தை டெபாசிட் செய்தனர். இன்னும் சிலரோ ஷர்மாவின் பெயரில் போலி ஆதார் கார்டையே உருவாக்கி ட்வீட் செய்தனர். அந்த ஆதார் கார்டை ஃபேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டதாக ஹாக்கர்கள் பதிவிட்டனர்.

More News >>