சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்கள் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகத்தில் சிலை திருட்டு ஆபத்து உள்ள கோவில்கள் பட்டியலை பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவில் சிலைக் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில் சிலைகளை பாதுகாப்பது தொடர்பாகவும் 2017ல் உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் கோவில்களில் 202-ம் ஆண்டுக்குள் சிலைகள் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி மகாதேவன், திருத்தப்பட்ட அட்டவணையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 242 கோவில்களில் 2019 டிசம்பருக்குள், சிலைகள் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் திருத்தப்பட்ட அட்டவணை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “கோவில் சிலைகள் திருட்டு தொடர்பாக தினந்தோறும் செய்திகள் வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறைக்கு வங்கியில் உள்ள 570 கோடி ரூபாயை, பாதுகாப்பு அறைகள் அமைக்க பயன்படுத்த வேண்டும்" என அறிவுறுத்தினார்.
"மேலும், சிலைகள் பாதுகாப்பு அறைகள் அமைக்கும் போது, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஆலோசனைகளை பெற வேண்டும்" என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ ஜி கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்ற நீதிபதி, சிலைத் திருட்டு ஆபத்து உள்ள கோவில்களின் பட்டியலையும், இந்த பாதுகாப்பு அறைகள் எப்படி அமைய வேண்டும் என்ற விவரங்களையும் தாக்கல் செய்ய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, "பல்வேறு கோவில்களில் இருந்து சிலைகள் காணாமல் போயுள்ளன. 2004 முதல் புகார்கள் வந்துள்ளன. இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்.?
இதற்கு இந்து சமய அறநிலைய துறை ஆணையர் தான் பொறுப்பு எனக் கூறி, சிலைகளை அடையாளம் காணும் பணியில் உள்ள அறநிலைய துறை திருப்பணிகள் பிரிவு கூடுதல் ஆணையர் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.