திரையரங்குகளில் உணவு... தெலங்கானா அரசு எச்சரிக்கை

திரையரங்குகளில், உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் 1 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என தெலங்கானா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் உணவு பொருட்களை அனுமதிக்க மறுப்பதோடு, அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சினிமா பிரியர்களின் கோரிக்கையாகும்.

திரையரங்குகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல விதிமுறைகளை விதித்து தெலங்கானா மாநில திரையரங்க கண்காணிப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கு மேல் உணவுப்பொருட்களை விற்பது சட்டவிரோதம், அதற்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"முதல்முறை குற்றம்சாட்டப்படுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம், 2-வது முறை கைதாகினால், 50 ஆயிரம் அபராதம் தொடர்ந்து தவறு செய்யும் பட்சத்தில் அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறை நாளை மறுதினம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. தொடர்ந்து திரையரங்குகளை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து எழுந்த புகாரை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெலங்கானா திரையரங்க கண்காணிப்பு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

More News >>