அமெரிக்க ஹெச்-1பி விசா கெடுபிடி செப்டம்பரில் பேச்சு - சுஷ்மா ஸ்வராஜ்
By SAM ASIR
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. இது குறித்து செப்டம்பரில் டெல்லியின் நடைபெற உள்ள இருதரப்பு பேச்சுவார்த்தையில் பேச இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்ற மேலவையில் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அரசு கடந்த பிப்ரவரி மாதம் தனது விசா கொள்கையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி ஹெச்-1பி வகை விசா வழங்குவதற்கான நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கையின்படி, ஹெச்-1பி பணியாளரை மூன்றாவது நபரது இடத்தில் பணியமர்த்த, பணி வழங்கும் நிறுவனம் தேவையான விளக்கங்களை அளித்து தேவையை நிரூபிக்க வேண்டும்.
இது குறித்து, "ஹெச்-1பி விசா கொள்கையில் இதுவரை பெரிய மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆனால் அமெரிக்க நடைமுறைகளை கடுமையாக்கியது குறித்து இந்திய அரசும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட மொத்த அவையுமே அக்கறையோடு இருக்கிறது. 2014ல் 1,08,000 என்ற எண்ணிக்கையிலிருந்த இவ்வகை விசாக்கள் 2018ல் 1,29,000 ஆக உயர்ந்துள்ளது. வருங்காலத்தில் ஒருவேளை எண்ணிக்கை குறைக்கப்படலாம் அல்லது விதிமுறைகள் கடுமையாக்கப்படலாம். அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக முடிந்த அளவு முயற்சி செய்கிறோம்.
ஏற்கனவே ரெக்ஸ் டில்லர்ஸனிடம் இப்பிரச்னை குறித்து பேசியுள்ளேன். வெள்ளை மாளிகை மற்றும் நிர்வாகத்தினரிடமும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் உரிய விதத்தில் தெரிவித்துள்ளோம். நமது நிதியமைச்சர் அமெரிக்க வணிகம் மற்றும் வர்த்தக செயலரிடம் இப்பிரச்னை குறித்து தமது அக்கறையை தெரிவித்துள்ளார். நமது வர்த்தக அமைச்சரும் இப்பிரச்னை குறித்து பேசியுள்ளார்.
இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் வண்ணம் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் 6-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அமெரிக்க அரசு செயலர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத் துறை செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோர் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இப்பேச்சுவார்த்தையில் நமது தரப்பு கோரிக்கையை தகுந்த விதத்தில் பதிவு செய்வோம்," என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.