கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை துவங்கிய நாடாளுமன்ற கூட்டத்தில் தேசிய நுழைவு தேர்வு பற்றிய விவாதங்கள் நடந்தன. அதில் பேசிய அ.தி.மு.க. எம்.பி ராஜேந்திரன் கணினி மயமாக இருக்கும் நீட் தேர்வுக்கு முன்னர் செய்துள்ள ஏற்பாடுகள் தொடர்பான கேள்விகளை முன்வைத்தார்.

மேலும், தேசிய நீட் தேர்வினை கணினி மூலம் நடத்துவதற்கு முன்பு மாணவர்களுக்கு அதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதில் அளித்த மனித வள மேம்பட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், கணினி மயம் ஆக்கப்படவுள்ள நீட் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் மாணவர்களுக்கு வாரம் 2 நாள் வீதம் ஐந்து மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும், மேலும் கிராமப்புற மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள் அவர்களுக்கு ஐந்து மாதம் பயிற்சி போதுமானதாக இருக்கும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, நீட் தேர்வு விவகாரத்தில் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. மாநில அரசின் கல்வி திட்டத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது. மத்திய அரசின் இந்த செயலை மாநில அரசு கடுமையாக எதிர்க்கிறது. மாநில அரசுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக அமைந்துள்ளது என்றார். தம்பிதுரையின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பிரகாஷ் ஜவ்டேகர், நீட் தேர்வு முறையில் மாநில அரசு நியமித்த மொழிபெயர்ப்பாளர்களை கொண்டு மாநில மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து தான் தேர்வு நடத்தப்படுகிறது.

மேலும் கடந்த தேர்வு போல மீண்டும் தவறு நடைபெறாது. மேலும் பேசிய அமைச்சர், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் 2 கோடி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் வெறும் 24 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேசிய தேர்வுகளை எழுதுகின்றனர். மீதம் உள்ள மாணவர்கள் அனைவரும் மாநில அரசின் திட்டம் மூலமாகவே தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது என திட்டவட்டமாக கூறினார் பிரகாஷ் ஜவ்டேகர்.

More News >>