கருணாநிதி புகைப்படம் வெளியீடு... பூரிப்பில் தி.மு.க தொண்டர்கள்
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் புகைப்படம் வெளியானதால் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த நான்கு நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த தி.மு.க தொண்டர்கள், வெயில்-மழையை பொருட்படுத்தாமல், காவேரி மருத்துவமனைக்கு வெளியே காத்துக்கிடக்கின்றனர்.
“வாழ்க வாழ்க வாழ்கவே...!தலைவர் கலைஞர் வாழ்கவே...” என தி.மு.க தொண்டர்கள் கோஷமிடுகின்றனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும், எம்.பி கனிமொழியும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எவ்வளவு கூறினாலும், சிறிதும் நகராமல் அங்கேயே காத்திருக்கின்றனர் தொண்டர்கள்.
ஒரு முறையாவது தலைவர் கருணாநிதி முகத்தைப் பார்க்க வேண்டும் எனவும் ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே’ என கருணாநிதி பேசுவதை கேட்க வேண்டும் என அவர்கள் உருக்கம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதியின் புகைப்படம் மற்றும் வீடியோவை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயியுள்ளனர்.
அத்துடன் காவேரி மருத்துவமனை கருணாநிதி உடல்நலம் குறித்து அறிக்கை ஒன்றையும், வெளியிட்டுள்ளது. அதில், "தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனைக்கு வந்த போதிருந்த பிரச்சினைகள் குணப்படுத்தப்பட்டுள்ளன. சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது
உடல் உறுப்பு இயக்கங்கள் சீராக உள்ளன. வயது முதிர்ச்சி காரணமாக அவரது உடல் தளர்ச்சியாக காணப்படுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருந்த போதிலும், சில நாட்கள் மருத்துவமனையில் அவர் இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. படிப்படியாக கருணாநிதியின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது” என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
காவேரி மருத்துவமனையில் இந்த அறிக்கை தி.மு.க தொண்டர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.