குஜராத் வெற்றிக்கு மோடி அலையோ அலையென்று அலைந்தார்!

குஜராத் வெற்றிக்கு மண்ணின் மைந்தரான மோடி அலையோ அலையென்று அலைந்தார் என்று திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஜராத்தில் பாஜக ஆட்சி மீண்டும் அமைகிறது இத்தேர்தல் முடிவுகள் மூலம் என்றாலும், அது முந்தைய பலத்தைப் பெற முடியவில்லை என்பது மறைக்கப்பட முடியாத உண்மை. மூச்சுத் திணறித்தான் வெற்றியின் முனையைத் தொட்டிருக்கிறது.

எதிர்க்கட்சியான காங்கிரசு பெருமளவில் இடங்களை கணிசமாகப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்காக பாஜகவும், பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் சாம, பேத, தான, தண்ட முயற்சிகள் சகலத்தையும் செய்துதான் இந்த அளவுக்கு இடங்களைப் பிடிக்க முடிந்தது!

மோடி பிரதமர் ஆகும்போது வாங்கிய வாக்கு சதவிகித எண்ணிக்கை அதன் பிறகு அவரது கட்சி வெற்றி பெற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்துகொண்டே போவதை சுவர் எழுத்துகள்போல படிக்கத் தவறக்கூடாது. உ.பி.யில் 23 சதவிகித வாக்குகளைப் பெற்று, எதிர்க்கட்சிகளின் பிளவினால்தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

தோல்விக்குச் சமமான வெற்றி!

குஜராத் வெற்றி ஒரு தோல்விக்குச் சமமான வெற்றி (Pyrrhic Victory) என்ற ஆங்கிலச் சொற்றொடர்தான் சரியான விளக்கமாகும். மண்ணின் மைந்தரான மோடி அலையோ அலையென்று அலைந்தார். பாகிஸ்தான் எதிர்ப்பு உள்பட பல்வேறு அஸ்திரங்களையும் கையாண்டும் பழைய எண்ணிக்கையைப் பெறாததே தோல்விக்குச் சமமான வெற்றி என்பதன் பொருளாகும்.

கடந்த தேர்தலில் 61 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசு, இந்த முறை 16 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. 25 தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. கடந்த தேர்தலில் 115 இடங்களைப் பிடித்த பாஜக இம்முறை 99 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியிலேயே பாஜக தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இமாச்சலப் பிரதேசத்தில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. இம்மாநிலத்தைப் பொருத்தவரை காங்கிரசும், பிஜேபியும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. பிஜேபியின் முதலமைச்சர் வேட்பாளர் தோல்வி அடைந்திருக்கிறார். முதலமைச்சராக இருந்து காங்கிரசு சார்பில் போட்டியிட்டவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் பி.ஜே.பி.யின் வாக்கு சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது.

குஜராத் மாநிலத்தைப் பொருத்தவரை கடந்த மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. பெற்ற வாக்கு சதவிகிதம் 59.1 வெற்றி பெற்ற குஜராத் தேர்தலில்கூட, பல முக்கிய பதவிகளில் இருந்த சபாநாயகர், அமைச்சர்கள் தோல்வியுற்றுள்ளனர் என்பது எதைக் காட்டுகிறது? இப்பொழுது நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்றதோ 54.4 சதவிகிதம்.

காங்கிரசைப் பொருத்தவரை முறையே 32.9 சதவிகிதம்; 42.3 சதவிகிதமாகும். யாருக்கு வளர்ச்சி? யாருக்கு வீழ்ச்சி? என்பதைக் கவனிக்கவேண்டும். பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து வருகிறது; பாஜகவின் ஆபத்தை வாக்காளர்கள் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக உணரத் தொடங்கியுள்ளனர் என்பதை நாட்டோருக்கு அறிவிக்கும் முடிவுகளே இவை.

ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு

காங்கிரசு கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியின் கடும் உழைப்பு - பிரச்சாரம் பலன் அளித்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு ஐக்கியப்படத் தொடங்கி, பலன் அளித்து வருகிறது என்பதையும் இது வெகுவாகவே காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

More News >>