சேலத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
சேலம் மாநகராட்சியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு இன்று முதல் தடை விதித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு பள்ளி, வருவாய் உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கவர்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.