நெஞ்சை பதற வைக்கும் கோர விபத்து... 8 பேர் பலி

கோவை அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம் சுந்தராபுரம் 4 வழிச்சாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக கோவையை நோக்கி சொகுசு கார் ஒன்று அதி வேகமாக வந்து கொண்டிருந்தது.

திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள், நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதி மின்கம்பத்தில் முட்டி நின்றது.

கார் வேகமாக வருவதை பார்த்த பொதுமக்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மீண்டும் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர்.

விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் சுதரித்த பொதுமக்கள், காருக்குள் இருந்த ஓட்டுநரை வெளியே இழுத்து போட்டு, சரமாரியாக தாக்கினர்.

பின்னர் ஓட்டுநர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மது போதையில் நிதானமின்றி காரை அதி வேகமாக ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஆடி கார், கோவை ரத்தினம் என்ற தனியார் கல்லூரி உரிமையாளருக்கு சொந்தமானது என்பதும் அதன் டிரைவர் ஜெகதீசன் என்பதும் தெரியவந்துள்ளது.

ஜெகதீசனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சிலரும் தெரிவித்துள்ளனர். எனினும் இதன் முழு உண்மை நிலவரங்கள் போலீசாரின் விசாரணையின் இறுதியிலேயே தெரியவரும் என்கின்றனர்.

கார் ஓட்டுநர் ஜெகதீசன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

More News >>