விஜய்யை தொடர்ந்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார் அஜித்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் நடிகர் அஜித்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. இதனால், தொண்டர்கள் மருத்துவமனையை சூழ்ந்தனர். தலைவா எழுந்துவா என்று கோஷங்கள் எழுப்பினர்.
ஆனால், சில மணி நேரங்களில் கருணாநிதியின் உடல் நிலை சீராகியது. அதை தொடர்ந்து இதுவரை கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கருணாநிதியை பல்வேறு கட்சி பிரமுகர்கள் நேரில் வந்து சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்து செல்கின்றனர். அந்த வகையில், இன்று காலை நடிகர விஜய் காவேரி மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்.
தற்போது, விஜய்யை தொடர்ந்து நடிகர் அஜித் இன்று இரவு 8 மணியளவில் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.