விபச்சார விடுதியில் இருந்து 11 சிறுமிகள் மீட்பு
தெலங்கானா மாநிலத்தில், விபச்சார விடுதியில் இருந்து 11 சிறுமிகளை மீட்ட போலீசார் 8 பேரை கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டம் யாதகிரி குட்டாவில் சிலர் விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.
அந்த பகுதியில் இருந்து 7 முதல் 11 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகளை காவல்துறையினர் மீட்டனர். மேலும் இவர்களை விபச்சாரத்துக்காக விற்க முயன்ற கடத்தல்காரர்கள் மற்றும் 8 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
இது பற்றி பேசிய ராட்சகுண்டா காவல் ஆணையர் மகேஷ் பக்வத், “யாதகிரிகுட்டாவில் விபச்சாரத்தில் ஈடுப்படுத்தும் நிர்வாகிகள் சில புரோக்கர்கள் மூலம் வறுமையான குடும்பத்தை சேர்ந்த சிறுமிகளை தலா ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து கடத்தியும், திருடி கொண்டு வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர்.”
“பணம் கொடுத்து அழைத்து வரப்படும் சிறுமிகளுக்கு விரைவில் வயதுக்கு வர செய்ய டாக்டர்கள் மூலம் சிறுமிகளுக்கு ஊசி போடப்பட்டு வந்துள்ளனர். சிறுமிகளை வயதுக்கு வர செய்வதற்காக ஊசி போட்ட டாக்டரான சுவாமி என்பவர் ஒவ்வொரு ஊசிக்கும் தலா 2500 ரூபாய் பணம் பெற்று வந்துள்ளார்.”
“மீட்கப்பட்ட சிறுமிகள் தற்போது அரசு சிறுவர் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.
சிறுமிகளை விபச்சாரத்துக்காக வாங்க மற்றும் விற்க முயன்றதற்கும், தவறான வழியில் சிறுமிகளை மருந்து கொடுத்து உபயோகிக்க முயன்றதற்கும், குழந்தை வன்கொடுமை போன்ற பல குற்றங்களுக்காக கைதானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.