ஜெயலலிதாவை பார்க்கவும் இல்லை சிகிச்சை அளிக்கவும் இல்லை - மருத்துவர் பல்டி
கடந்த 2016ஆம் ஆண்டு 22ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாசரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிட தமிழக அரசு சார்பில் மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜன், கலா, முத்துசெல்வன், டிட்டோ ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களுக்கு ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், டாக்டர்கள் குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் முரளிதரனுக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
ஜெயலலிதா மரணம் குறித்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான முரளிதரன், “ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கவும் இல்லை; அவரை பார்க்கவும் இல்லை” தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.