மத்தியப்பிரதேசத்தில் சிறுநீர் குடிக்க வைத்து இளம் ஜோடி சித்ரவதை
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தாஸ்பூர் மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற ஹிதேஸ். இவரும், அதே ஊரை சேர்ந்த நங்கிபாய் என்ற பெண்ணும் காதலித்தனர்.
அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், இருவரும் கிராமத்தை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து கிராம பஞ்சாயத்து, இளைஞரின் குடும்பத்தினர், பெண் வீட்டாருக்கு 70 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இரு வீட்டாரும் இளம் ஜோடியை தேடி வந்தனர்.
உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்திருப்பதை அறிந்த பெற்றோர்கள், அங்கு வந்த இளம் ஜோடிகளை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். ரமேஷை கம்பத்தில் கட்டி வைத்து பெண் வீட்டார் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், அவர்களின் ஆத்திரம் அடங்காததால், இளம் ஜோடியை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் ஹர்தாஸ்பூர் கிராமத்திற்கு சென்று இளம் ஜோடியை மீட்டனர்.
சித்ரவதை செய்ததாக பெண்ணின் தந்தை மற்றும் சித்தப்பாக்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். நங்கிபாயின் தந்தை கெரம்சிங் கிராம பாஜக தலைவராக இருக்கிறார்.