ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல்? - மத்திய அமைச்சரின் பதில்
பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வரவேண்டும் என்பதே மத்திய அரசு மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் விருப்பம் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஜி.எஸ்.டி க்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை மட்டும் அந்த வரிக்குள் வரவில்லை. அதற்கு மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி என்று பல வரிகள் இருப்பதால், அதன் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
எனவே, முன்பு இருந்தது போன்று பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அத்துடன், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு ஒன்றுக்குப் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துப் பேசுகையில், “பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வரவேண்டும் என்பதே மத்திய அரசு மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் விருப்பமாகும். தகுந்த நேரத்தில் உரிய விவாதம் நடத்தி ஜி.எஸ்.டி. கவுன்சில் தகுந்த நடவடிக்கை எடுக்கும். அந்த முடிவை நாங்கள் ஆதரிப்போம்”. என்று கூறியுள்ளார்.
பெட்ரோலிய பொருட்களுக்கு தற்போது ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி வரி விதிப்பதால், பல பகுதியில் வெவ்வேறு விலைகளில் பெட்ரோல், டீசல் விற்கப்படுவதாக கூறிய தர்மேந்திர பிரதான், “இந்த பொருட்கள் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலை இருக்கும்” எனவும் தெரிவித்தார்.