மாணவர்களின் நம்பிக்கை நாயகனான இளம் மருத்துவர்
ஒசூர் அருகே பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான இளைஞர், தாம் படித்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பணியையும் செய்து வருகிறார்.
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்" (திருக்குறள் 619 - ஆள்வினையுடைமை)
என்பது திருவள்ளுவர் வாக்கு. இதனை உண்மையாக்கியுள்ளார் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளம் மருத்துவர் ரஜினி கலையரசன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுவயதில் பெற்றோரை இழந்து, தந்தை வழி பாட்டி அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். அரசு பள்ளி சத்துணவை சாப்பிட்டு, கஷ்டத்திலும் இஷ்டப்பட்டு பலரின் உதவியுடன் அரசு பள்ளியில் படித்து, மருத்துவராகி சாதனை படைத்துள்ளார்.
நம்பிக்கை நட்சத்திரமான ரஜினி கலையரசன் எம்.டி படிப்பதற்காக தற்போது உத்தனப்பள்ளியில் கிளினீக் ஒன்றை நடத்தி வருகிறார். பணி இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தாம் படித்த அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவியருக்கு, அறிவியல் மற்றும் தமிழ் பாடங்களை நடத்தி வருகிறார் இளம் மருத்துவர்.
மருத்துவரை பார்த்ததும் மாணவர்களின் அப்படி ஆர்ப்பரிக்கின்றனர். தன்னம்பிக்கை கதைகளையும், தாம் மருத்துவரான பின்புலங்களையும் எடுத்துரைத்து மாணவ- மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்.
அயராத உழைப்பால், மனதை தளரவிடாமல் விடாமுயற்சியுடன் வீர நடைபோடும் மருத்துவர் ரஜினி கலையரசனின், சுயநலமில்லாத தொண்டை பாராட்டும் உத்தனப்பள்ளி மக்கள் மனம் நெகிழ்ந்துள்ளனர்.