சோப்பு கட்டியை கொடுத்து வங்கி மேலாளருக்கு கல்தா கொடுத்த ஆசாமிகள்
ஐபோன் என்று கூறி சோப்பு கட்டியைக் கொடுத்து வங்கி மேலாளரை ஏமாற்றிய இரண்டு மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் வசிப்பவர் ரமேஷ் . இவர் லஸ் சர்ச் சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணியாற்றுகிறார்.வங்கியின் வழக்கமான பணிகள் முடிந்த பின்னர் தனது அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் ரமேஷ்.
அப்போது இரண்டு பேர் அவரைப் பார்க்க வந்திருப்பதாக காவலாளி சொல்ல, உள்ளே வரச்சொல்லி தனது அறையில் அமர வைத்திருக்கிறார். புதுமாடல் ஐபோன் தங்களிடம் உள்ளதாகவும் அதை வெறும் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளனர்.
முதலில் வாங்க மறுத்த வங்கி மேலாளர், பின்னர் இரு இளைஞர்களிடம் 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து ஐபோனை பெற்றுள்ளார். 5 நிமிடம் கழித்து அந்த பாக்சை பிரித்தபோது அதிலே ஊர்வசி சோப்பு கட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து வங்கி மேலாளர் ரமேஷ் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவர்கள் இருவரும் வங்கிக்குள் வந்து மேலாளரிடம் பேசும் சிசிடிவி காட்சிகளும் போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கி மேலாளர் ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார், அந்த இரு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.