சிரியா - பிணைக்கைதிகளின் கோரிக்கை வீடியோ

இத்தாலி மற்றும் ஜப்பானிய பிணைக்கைதிகள், தங்களை சிரியாவிலிருந்து விடுவிக்க கோரிக்கை வைக்கும் ஒளிப்பதிவுகள் வெளியாகியுள்ளன.

வெவ்வேறு வீடியோக்களில் ஆரஞ்சு வண்ண உடையில், சுவர் ஒன்றின் முன்பு கைதிகள் முழங்காலிட்டிருக்க , அருகில் தலை முதல் கால் வரை கறுப்பு வண்ண ஆடை அணிந்து துப்பாக்கி ஏந்திய மனிதர்கள் நின்றிருக்கிறார்கள்.

ஒரு வீடியோவில் காணப்படுபவர் ஜப்பானிய பத்திரிகையாளர் ஜம்பெய் யசுதா (வயது 44). முன்பு அல் கொய்தா இயக்கத்தோடு இணைந்திருந்த அல் நுஸ்ரா முன்னணி என்ற இயக்கம் வட சிரிய பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு இவரைப் பிடித்துள்ளது.

தன்னை கொரிய இனத்தவர் என்று கூறும் ஜம்பெய், தான் கொடூரமான சூழ்நிலையில் இருப்பதாகவும் தனக்கு உதவி செய்யுமாறும் ஜப்பானிய மொழியில் வேண்டுகோள் வைத்துள்ளார். வீடியோ பதிவு செய்த நாள் ஜூலை 25 என்று தெரிகிறது.

இன்னொரு வீடியோவில் இருப்பவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த அலெஸ்ஸாண்ட்ரோ சாண்டிரினி (வயது 32). இவர் தோன்றும் வீடியோ ஜூலை 19-ம் தேதி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 அக்டோபர் மாதம் துருக்கியில் இவர் கடத்தப்பட்டுள்ளார்.

“கடைசி முறையாக தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பு கொடுங்கள். கூடிய விரையில் நிலையை சீர்செய்ய இத்தாலி அரசு உதவும்படி கேட்கிறேன். நான் இரண்டு ஆண்டுகளாக சிறைப்பட்டுள்ளேன். தாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பதாகவும், விரைவில் எந்த பலனும் கிடைக்காவிட்டால் என்னை கொன்றுவிடுவதாகவும் கூறுகிறார்கள்," என்று சாண்டிரினி பேசியுள்ளார்.

இந்த ஒளிப்பதிவுகளை தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகளை தேடி ஆய்வு செய்யும் SITE Intelligence Group என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இது அமெரிக்காவை மையமாக கொண்டு, இயங்கி வருகிறது.

More News >>