பாடாய் படுத்தும் கிகி சேலஞ்ச்: உயிருக்கு போராடும் இளம்பெண்
கிகி சேலஞ்ச் செய்ய முயன்று காரில் இருந்து தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள இளசுகளை பாடாய் படுத்துக் கொண்டிருக்கிறது இந்த கிகி சேலஞ்ச். அது என்ன கிகி சேலன்ஞ் என்று கேட்பவர்களுக்கு இதோ பதில். காரில் சென்றுக் கொண்டிருப்பவர்கள் பாட்டு போட்டதும் ஓடும் காரில் இருந்து குதித்து நடனமாடியபடி மீண்டும் ஓடும் காரில் ஏறுவது தான். இதை சேலஞ்ஜாக எடுத்துக் கொண்டு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படுகிறது. இந்த கிகி சேலஞ்ச் இளைஞர்களிடையே வேகமாக டிரெண்டாகி வருகிறது.
இந்த சேலஞ்சை ஆரம்பித்து வைத்தவர் கனடாவை சேர்ந்த பாப் பாடகர் ஒருவர். ஆனால், இதன் பயம் அறியாமல் சேலஞ்சை எடுத்துக் கொண்டு நடு ரோட்டில் ஆடுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் லோவா நகரத்தை சேர்ந்த அன்னா ஓர்டன் (18) என்ற இளம்பெண் சமீபத்தில் கிகி சேலஞ்சை முயன்றார். அப்போது, ஓடும் காரில் இருந்து அன்னா கீழே இறங்க முயன்றபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில், விழுந்த வேகத்தில் அன்னாவின் தலைப்பகுதி பலத்த காயமடைந்தது. இவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அன்னா கவலைக்கிடமான நிலையில் தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.உயிரையே பறிக்கும் கிகி சேலஞ்சால் பெண் ஒருவர் கவலைக்கிடமாக இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.