அலிபாபாவும் ஸ்டார்பக்ஸூம்: சீனாவில் களமிறங்கும் கூட்டணி
By SAM ASIR
சீனாவில் ஸ்டார்பக்ஸ் மற்றும் அலிபாபா நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளன.
மொபைல் செயலிகள் மூலம் பெறப்படும் ஆர்டர்களை, அலிபாபா மின்னணு வர்த்தக நிறுவனத்தின் டெலிவரி பிரிவின் (Ele.me) மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப ஸ்டார்பக்ஸ் முடிவு செய்துள்ளது.
சீன மக்கள் பாரம்பரியமாக தேநீர் அருந்துவார்கள். தற்போது அங்கு காஃபி மீது பெரிய ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு அது பெரிய சந்தையாக மாற உள்ளது.
சீனாவின் புதிய நிறுவனமான லக்கின் காஃபி, மொபைல் செயலி மூலம் ஆர்டர்களை பெற்று டெலிவரி தந்து ஸ்டார்பக்ஸூக்கு பெரிய சவாலாக விளங்கி வருகிறது. இதன் வணிக சாம்ராஜ்யம் வேகமாக விரிவடைந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் 2,000க்கும் அதிகமான கடைகளை திறக்க லக்கின் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸின் வணிகம் முழு நிறைவை எட்டியுள்ள நிலையில், கடந்த ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட்டுள்ளது. சீனாவில் 140 நகரங்களில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு 3,400க்கும் மேலான கடைகள் உள்ளன. 2022-ம் ஆண்டு இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக ஸ்டார்பக்ஸ் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு 15 மணி நேரத்திற்கும் ஒரு புதிய ஸ்டார்பக்ஸ் கடை சீனாவில் திறக்கப்பட்டு வருகிறது.
செப்டம்பர் மாதம் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களில் 150க்கும் மேற்பட்ட ஸ்டார்பக்ஸ் கடைகளிலிருந்து டெலிவரி ஆரம்பமாகும் என தெரிகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 30 நகரங்களில் 2,000க்கும் அதிகமான கடைகளிலிருந்து டெலிவரி செய்யப்பட முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஷாங்காய் நகரில் நடந்த செய்தியாளர் கருத்தரங்கில், ஸ்டார்பக்ஸ் மற்றும் அலிபாபா இரு நிறுவனங்களின் இணைந்த செயல்பாடு குறித்து பேசும்போது, "இரு நிறுவனங்களின் இணைந்த பங்களிப்பு சீனாவின் காஃபி கலாசாரத்தை உயர்த்தும் என்று உண்மையாக நம்புகிறோம்," என்று ஸ்டார்பக்ஸ் நிறுவன தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான கெவின் ஜாண்சன் கூறியுள்ளார்.