கோவை சாலை விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

கோவையில் நேற்று நடந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கோவை சுந்தராபுரத்தில் சாலையில் நின்றுக் கொண்டிருந்தவர்கள் மற்றும் ஆட்டோ மீது சொகுசு கார் மோதியதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மது குடித்துவிட்டு கார் ஓட்டியதால் தான் இந்த கோர விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், தலைமறைவான கார் ஓட்டுனர் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:

கோவை மதுக்கரை வட்டம், சுந்தராபுரத்தில் கடந்த 1-ந்தேதி பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்த கார், சுந்தராபுரம் நான்கு வழிச்சாலையில் நிலைதடுமாறி சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

இதில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பயணிகள் மற்றும் சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவிகள் உள்பட 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் காயமடைந்த 3 நபர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடுதிரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

More News >>