மோடியை போல் வேறு எந்த இந்திய பிரதமரும் இல்லை - சுஷ்மா சுவராஜ்

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றியதை போன்று வேறு எந்த இந்திய பிரதமரும் உரையாற்றவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

துர்க்மெனிஸ்தான் சென்ற அவரை கஜகஸ்தான் செல்லும் வழியில் அஸ்காபாத் விமான நிலையத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷித் மெரிதோவ் வரவேற்றார். விமான நிலையத்தில் நடைபெற்ற சந்திப்பில் இருநாட்டு உறவுகள் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், துர்க்மெனிஸ்தானில் இருந்து கஜகஸ்தான் தலைநகர் அஸ்டானா சென்ற சுஷ்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, கஜகஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி கைராட் அப்தரக்மனோவை சந்தித்து வர்த்தக உறவுகளை ஊக்கப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதற்கிடையில், கஜகஸ்தான் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஷ்மா , ‘பிரதமர் நரேந்திர மோடியை போன்று ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரையிலான எந்த பிரதமரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியது இல்லை. முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் தற்போதய அரசு நெருக்கமாக இருந்து வருகின்றது." என்று கூறினார்.

More News >>