விஸ்வரூபம் 2 படம்... கமலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2008ஆம் ஆண்டு 100 கோடி ரூபாய் செலவில் மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு சம்பளமாக 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த தொகையை திருப்பி தராததால், விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பிரமிட் சாய்மிரா பட நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 4 கோடி ரூபாயை, வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியாக கொடுக்க வேண்டும். அதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மர்மயோகி படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதற்கான வீடியோக்களும், போட்டோக்களும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்திடம் காண்பிக்கப்பட்டுவிட்டது என்று கமல் ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுவுக்கு வரும் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க கமல் ஹாசன், ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.